Home மாவட்டங்கள் பெங்களூர் கே.பி.எஸ்.சி. முறைகேடு:1,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

கே.பி.எஸ்.சி. முறைகேடு:1,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூரு, நவ. 14-
கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கால்நடை மருத்துவ ஆட்சேர்ப்பு முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முதல் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளனர். சுமார் 1,500 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப்பத்திரிகையில், வழக்கின் முக்கியக் குற்றவாளிகளான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஞானேந்திர குமார் மற்றும் முக்கியத் தரகர் பசவராஜ் கன்னாலே ஆகியோர் மீது பல்வேறு கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குற்றப்பத்திரிகையின்படி, ஜனவரி 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் பல்வேறு சொகுசு விடுதிகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆர்க்கிட் நிர்வாணா உள்ளிட்ட பல்வேறு விடுதிகளில் சுமார் 20 விண்ணப்பதாரர்களுக்குத் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. ஜனவரி 7-ம் தேதி பென்டிரைவ் மூலம் ஞானேந்திர குமார், பசவராஜ் கன்னாலேவிடம் கேள்விகள் மற்றும் பதில்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இரண்டு வினாத்தாள்களுக்கான 80 மதிப்பெண்கள் கொண்ட கேள்விகள் பென்டிரைவில் பதிவேற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இறுதிக்கட்ட வினாத்தாளையே ஞானேந்திர குமார் மற்றும் கன்னாலே ஆகியோர் நகலெடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அலுவலகத்தில் இருந்த டேப்லெட் கருவியில் வினாத்தாள் நகலெடுக்கப்பட்டது. பின்னர், தடயங்கள் சிக்காமல் இருப்பதற்காக அதே நாளில் அந்த டேப்லெட் உடைத்து வீசப்பட்டதாகவும் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வினாத்தாள் வழங்குவதாகக் கன்னாலே நம்பவைத்துள்ளார். ஆரம்பத்தில் ரூ.80 லட்சம் கேட்ட அவர், பின்னர் அதனை ரூ.40 லட்சமாகக் குறைத்துக்கொண்டதாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ரூ.1.70 கோடி பணத்தைக் கன்னாலேவிடம் இருந்து ஞானேந்திர குமார் பெற்றுக்கொண்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. 2025-ம் ஆண்டில் ஞானேந்திர குமார் தனது அண்ணிக்கு ரூ.15.39 லட்சம் பணம் கொடுத்துள்ளார். மேலும், சகோதரரின் வங்கிக் கணக்கிற்கு ரூ.10.94 லட்சம் மாற்றியுள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முறைகேடாகச் சம்பாதித்த பணத்தைத் தங்களது சொந்த வருமானம் எனக் காட்ட குற்றவாளிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதிகாரியின் வீட்டில் சோதனை நடத்தியபோது சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் கால்நடை மருத்துவர் பணியிடத்திற்கான இரண்டு விண்ணப்பதாரர்களின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன. 1:3 என்ற விகிதத்தில் தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மற்ற அதிகாரிகளும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
இதுதவிர, முறைகேட்டின் மூலம் கிடைத்த பணம் உமேஷ் மற்றும் ஓம்கார் ஆகியோருக்கு மாற்றப்பட்டுள்ள தகவலும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. கால்நடை மருத்துவ ஆட்சேர்ப்பு முறைகேடு விசாரணையில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள இந்த முதல் குற்றப்பத்திரிகை பல முக்கியத் தகவல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ள நிலையில், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.