
சென்னை: நவ. 17-
கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்துக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுத்தாளர் பெருமாள் முருகன் முதலில் குற்றச்சாட்டை எழுப்பினார்.
இதையடுத்து, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம், எழும்பூர் கன்னிமாரா நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகியவற்றிலும் புத்தகக் கொள்முதலில் முறைகேடு நடந்ததாகப் புகார்கள் எழுந்தன.
இந்தப் புகார்களைத் தொடர்ந்து, பொது நூலகத்துறை பொறுப்பு இயக்குநர் எஸ்.ஜெயந்தி மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக ஷஜீவனா நியமிக்கப்பட்டார். மேலும், புத்தகக் கொள்முதல் முறைகேடு தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், கடந்த வாரம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் போலீஸார் சோதனை நடத்தினர்.தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, போலி நூல்களை அகற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதற்கிடையே, முறைகேடு புகார் தொடர்பாக நூலகத் துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் நேற்று முன்தினம் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.இந்நிலையில், லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் விசாரணையில், அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் ஆர்.மோகன், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் மற்றும் சென்னை பொது நூலக இயக்குநரகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கோவை பெரியார் அறிவுலகம் நூலகம் ஆகியவற்றைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர்கள் உள்ளிட்டோர் கூட்டுச் சதியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக மோகன், பீனிக்ஸ் பப்ளிகேஷன்ஸ் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.













