
மங்களூரு, நவ. 18-
சிமெண்ட் மற்றும் இரும்பு விற்பனை நிறுவன ஊழியரிடம் ரூ.8.35 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்த வழக்கை பன்ட்வால் ஊரக போலீசார் துப்பு துலக்கி, 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
மங்களூரு சக்தி நகரைச் சேர்ந்த பிரவித் ஷெட்டி (பிரவித் ராஜ் ஷெட்டி), உள்ளால் கோடியைச் சேர்ந்த உமர் பாரூக் மற்றும் உள்ளால் ஹரேகளாவைச் சேர்ந்த ஷாகிர் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களிடமிருந்து ரூ.2.01 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
மங்களூரு கண்ணூரில் உள்ள சிமெண்ட் மற்றும் இரும்பு விற்பனை நிறுவனத்தில் மய்யதி (வயது 40) என்பவர் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். நிறுவனத்தின் வசூல் பணத்தைச் சேகரிக்கும் பொறுப்பை இவர் கவனித்து வந்தார். அதன்படி, கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி பல்வேறு கடைகளில் பணத்தை வசூலித்துக்கொண்டு, காக்கேபதவு பகுதியில் இருந்து பாணேமங்களூரு நோக்கி மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தார்.
அன்று மதியம் 1 மணியளவில், பன்ட்வால் தாலுகா மணினால் கூரு கிராமம் முல்காஜே மாடா என்ற இடத்தில், 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 மர்ம நபர்கள் மய்யதியை வழிமறித்து மிரட்டினர். பின்னர், அவரிடமிருந்த ரூ.8 லட்சத்து 35 ஆயிரம் பணத்தைக் கொள்ளையடித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
போலீசார் நடவடிக்கை
இது குறித்து பன்ட்வால் ஊரக போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், கடந்த நவம்பர் 11-ம் தேதி இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரைக் கைது செய்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட பிரவித் ராஜ் ஷெட்டியை அடையாளம் காணும் அணிவகுப்பும் நடத்தப்பட்டது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்றொரு நபரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.













