
கண்ணூர், நவ. 19–-
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம், இரிக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் மெரடன் குஞ்சாமினா (60). இவரது பக்கத்து வீட்டில் டெல்லியைச் சேர்ந்த துணி வியாபாரியான பர்வீன் பானு (55), அவரது மகள் ஷக்கீனா பாத்திமா (35), அப்பாஸ் அலி (38) ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 30-ந்தேதி, பர்வீன் பானு தனது மகள் மற்றும் மகனுடன் குஞ்சாமினாவின் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அங்கு மூதாட்டியை நாற்காலியில் அமர வைத்து, கை, கால்களைக் கட்டியுள்ளனர். பின்னர் அவரது கழுத்தில் ஸ்க்ரு டிரைவரால் குத்தி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து, குஞ்சாமினா அணிந்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு 3 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். பக்கத்து வீட்டைச் சேர்ந்த 3 பேரும் தலைமறைவானதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் மத்தியப் பிரதேசத்தில் பதுங்கியிருந்த பர்வீன் பானு மற்றும் அவரது மகள் ஷக்கீனா பாத்திமா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் அப்பாஸ் அலியை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். கண்ணூர் போலீஸ் சூப்பிரண்டு கே.வி.வேணுகோபால் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜித் கொடேரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் சப்-இன்ஸ்பெக்டர் அப்துல் ரப், மனேஷ் மற்றும் போலீசார் இடம்பெற்றிருந்தனர். தனிப்படை போலீசார் அப்பாஸ் அலியைத் தேடி வந்தனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள பிரேம் நகர் வீட்டில் பதுங்கியிருந்த அப்பாஸ் அலியை போலீசார் கைது செய்தனர். மூதாட்டி கொலை மற்றும் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், சம்பவம் நடந்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.













