Home செய்திகள் தேசிய செய்திகள் ஒடிசாவை தாக்கும் அக்வான் புயல்; 46 ஆயிரம் பேர் வெளியேற்றம்

ஒடிசாவை தாக்கும் அக்வான் புயல்; 46 ஆயிரம் பேர் வெளியேற்றம்

பூரி: நவ. 19-
தெற்கு வங்காள விரிகுடாவின் மத்தியப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் நிலவும் தீவிர சூறாவளி புயலான அக்வான், வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்துள்ளது.
தமிழகத்தை விட்டு விலகிச் செல்லும் இந்தப் புயல், ஆந்திராவின் மசூலிப்படினம் – ஒடிசாவின் பூரி இடையே நாளை நண்பகலுக்குள் தீவிரப் புயலாகக் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று அதிகாலை 2.30 மணி நிலவரப்படி ஒடிசாவின் கோபால்பூருக்கு தெற்கே சுமார் 580 கி.மீ., தொலைவிலும், புரிக்கு தெற்கே 640 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.
இதனால், நாளையும், நாளை மறுநாளும் ஒடிசாவின் தெற்கு, வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிதீவிர கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கஞ்சம், மல்கன்கிரி, ராயகடா, கோராபுட் மற்றும் கலாஹண்டி அதிக பாதிப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒடிசாவில் 448 புயல் பாதுகாப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 3,000 மையங்கள் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. 46,700க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு, நிவாரணப் பணிகளுக்காக 60 ஒடிசா பேரிடர் விரைவு அதிரடிப்படை குழுக்களும், 14 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன.