
பெங்களூரு, நவ. 19-
கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம் (கே.பி.எஸ்.சி.) பணி நியமன முறைகேடு வழக்கில், தகுதியற்றவர்களைத் தேர்வு செய்ய சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாத இடங்களில் நேர்காணல் நடத்தப்பட்டது அமலாக்கத்துறை (இ.டி.) விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கே.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் ஞானேந்திர குமாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. கால்நடை மருத்துவர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான நேர்காணலின் போது சி.சி.டி.வி. கேமரா வசதி இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சி.சி.டி.வி. இல்லாத இடத்தில் நேர்காணல் நடத்தியது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியபோது, “சி.சி.டி.வி. ஏற்பாடுகள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதுபற்றி கே.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் செயலாளரிடமே கேளுங்கள்” என ஞானேந்திர குமார் பதிலளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ரூ.15 கோடி பணம்
இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான பசவராஜ் கன்னாளே, விண்ணப்பதாரர்களிடம் இருந்து வசூலித்த சுமார் ரூ.15 கோடியை ஜெயமஹாலில் உள்ள ஞானேந்திர குமாரின் வீட்டிற்குக் கொண்டு சென்று கொடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்திருந்தார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஞானேந்திர குமார், தான் கன்னாளேயிடம் இருந்து எந்தப் பணமும் பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அவரது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குகளில் பெருமளவு ரொக்கப் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.
அவரது குடும்பத்தினரின் கணக்குகளில் ரூ.15 லட்சத்து 39 ஆயிரத்து 500 மற்றும் ரூ.10 லட்சத்து 94 ஆயிரம் ரொக்கமாகச் செலுத்தப்பட்டிருப்பதை விசாரணை அமைப்பு கண்டறிந்துள்ளது. இந்தப் பணத்திற்கான ஆதாரம் குறித்து அதிகாரிகள் கேட்டபோது, ஞானேந்திர குமார் சரியான பதில் அளிக்காமல் மவுனம் சாதித்ததாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி நியமன முறைகேடு
கே.பி.எஸ்.சி. நடத்திய கால்நடை மருத்துவர், இளநிலை பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு அரசிதழ் பதிவு பெற்ற மற்றும் தொழில்நுட்பப் பணியிடங்களுக்கான நியமனத்தில் பெருமளவில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது.
தகுதியான விண்ணப்பதாரர்களைப் புறக்கணித்து, கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணியிடங்கள் விற்பனை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் விசாரணை தொடங்கியது. இந்த முறைகேட்டின் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
விசாரணையின் போது இடைத்தரகர் பசவராஜ் கன்னாளே மற்றும் கே.பி.எஸ்.சி. முன்னாள் உறுப்பினர் ஞானேந்திர குமார் இடையேயான பணப் பரிவர்த்தனைகள் மற்றும் நேர்காணல் நடைமுறையில் நடந்த குளறுபடிகள் குறித்துப் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.













