Home மாவட்டங்கள் சென்னை கொளத்தூர் தவெக எம்எல்ஏ பாபு உடல் இன்று தகனம்

கொளத்தூர் தவெக எம்எல்ஏ பாபு உடல் இன்று தகனம்

சென்னை: நவ. 20-
சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டப்பேரவை உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது. 70 வயதான வி.எஸ்.பாபு, கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் பல்துறை மருத்துவர்கள் கொண்ட குழுவினர் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே கண்காணிக்கப்பட்டு வந்தார்.சுமார் 70 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வி.எஸ்.பாபு, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் பெரம்பூரில் உள்ள இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல்-அமைச்சர் விஜய், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.இந்த நிலையில், வி.எஸ்.பாபுவின் உடல் இன்று மாலை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. தொடர்ந்து, மாலை 4.30 மணியளவில் திரு.வி.க. நகர் தாங்கல் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட உள்ளது.மறைந்த வி.எஸ்.பாபுவுக்கு பரிமளா என்ற மனைவியும், ராம்பிரகாஷ், சதீஷ், விக்னேஷ், பாலசுப்பிரமணி ஆகிய 4 மகன்களும், சரிதா என்ற மகளும் உள்ளனர்.