Home மாவட்டங்கள் பெங்களூர் 5 ஆண்டில் 473 யானைகள் பலி நாட்டிலேயே கர்நாடகாவுக்கு 5-வது இடம்

5 ஆண்டில் 473 யானைகள் பலி நாட்டிலேயே கர்நாடகாவுக்கு 5-வது இடம்

பெங்களூரு, நவ. 20-
கர்நாடக மாநிலத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் மொத்தம் 473 யானைகள் உயிரிழந்துள்ளன. இதன் மூலம் நாட்டிலேயே யானைகள் உயிரிழப்பு எண்ணிக்கையில் கர்நாடகா 5-வது இடத்தில் உள்ளது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், உயிரிழந்த யானைகளில் 65 யானைகள் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளன. பந்திப்பூர், நாகரஹொளே, பத்ரா, காவிரி, தாண்டேலி, பிலிகிரிரங்கன மலை, மாதேஸ்வரன் மலை மற்றும் தலைக்காவிரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு வனவிலங்கு சரணாலயங்களில் 2021 முதல் 2026-ம் ஆண்டு வரை இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மேலும் மண்டியா, கொப்பா, தார்வாட், ஹாசன், மங்களூரு மற்றும் விராஜ்பேட்டை வனப்பகுதிகளிலும் யானைகள் உயிரிழந்துள்ளன என்று வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது. வனப்பகுதியையொட்டிய விளைநிலங்களில் விவசாயிகள் தங்களது ராகி, காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை காட்டு விலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமாக மின்வேலிகளை அமைப்பதே யானைகள் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக உள்ளது. உணவு தேடி விளைநிலங்களை நோக்கி வரும் யானைகள் இந்த மின்கம்பிகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழக்கின்றன. நாகரஹொளே, பந்திப்பூர், காவிரி, மாதேஸ்வரன் மலை மற்றும் மடிகேரி வனப்பகுதிகளிலேயே அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. யானைகளின் உயிரைக் காக்க விளைநிலங்களைச் சுற்றி சட்டவிரோத மின்வேலிகளுக்குப் பதிலாக பாதுகாப்பான சூரிய சக்தி வேலிகளை (சோலார் வேலி) அமைக்குமாறு விவசாயிகளுக்கு வனத்துறை வேண்டுகோள் விடுத்து வருகிறது. இருப்பினும் மின்சாரம் தாக்கி 65 யானைகள் உயிரிழந்திருப்பது வனவிலங்கு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாகரஹொளே தேசிய பூங்கா இயக்குனர் சவுரப் குமார் கூறுகையில், பூங்கா எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மின்சாரம் தாக்கி இறந்த நான்கு யானைகள் உட்பட மொத்தம் 71 யானைகள் உயிரிழந்துள்ளன. வனப்பகுதியையொட்டிய விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காட்டு யானைகள் மற்றும் பிற வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாக்க விவசாயிகள் சூரிய சக்தி வேலிகளை அமைக்குமாறு வனத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது என்றார். வனவிலங்கு ஆராய்ச்சியாளர் டாக்டர் சி. மாதேகவுடா கூறுகையில், வனப்பகுதியையொட்டிய இடங்களில் உணவு தேடி வரும் யானைகளைத் தடுக்க விவசாயிகள் பாதுகாப்பான சூரிய சக்தி வேலிகளை அமைக்க வேண்டும். மின்கம்பிகளைப் பயன்படுத்துவதால் யானைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. இதுகுறித்து வனத்துறை விவசாயிகளுக்கு அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன் யானைகளுக்கு காட்டிலேயே போதுமான உணவும் தண்ணீரும் கிடைக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். வனவிலங்கு நிபுணர் ஜோசப் ஹூவர் கூறுகையில், யானைகள் உயிரிழப்பு சம்பவங்களில் ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்கு வங்காளம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக கர்நாடகா ஐந்தாவது இடத்தில் உள்ளது. வன எல்லையில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதற்கு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாததும் ஒரு காரணமாகும். மின்சார வாரியம் (செஸ்க்), வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் காவல்துறை ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
யானைகள் உயிரிழப்பு விவரம்
2021-ம் ஆண்டில் 82 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் துப்பாக்கிச் சூட்டால் 2, பள்ளத்தில் விழுந்து 1, ரெயிலில் அடிபட்டு 1 மற்றும் இயற்கையான முறையில் 78 யானைகள் உயிரிழந்துள்ளன. 2022-ம் ஆண்டில் 72 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் மின்சாரம் தாக்கி 12, சாலை விபத்தில் 2, துப்பாக்கிச் சூட்டால் 2 மற்றும் இயற்கையாக 56 யானைகள் உயிரிழந்துள்ளன. 2023-ம் ஆண்டில் 98 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் மின்சாரம் தாக்கி 14, துப்பாக்கிச் சூட்டால் 1 மற்றும் இயற்கையாக 83 யானைகள் உயிரிழந்துள்ளன. 2024-ம் ஆண்டில் 109 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் மின்சாரம் தாக்கி 13 மற்றும் இயற்கையாக 96 யானைகள் உயிரிழந்துள்ளன. 2025-ம் ஆண்டில் 100 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் மின்சாரம் தாக்கி 15 மற்றும் இயற்கையாக 85 யானைகள் உயிரிழந்துள்ளன. 2026-ம் ஆண்டில் மே 22-ந்தேதி வரை 12 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் மின்சாரம் தாக்கி 1 மற்றும் இயற்கையாக 11 யானைகள் உயிரிழந்துள்ளன.