
சென்னை, நவ. 20-
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் மனைவியும், கிரீன்கலாம் அமைப்பின் நிறுவனருமான அருட்செல்வி, சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேற்று சந்தித்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அருட்செல்வி கூறியதாவது: “நேற்று எனது கணவர் விவேக்கின் 66-வது பிறந்த நாள். முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, இந்த நல்ல நாளில் அவரை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். இந்த சந்திப்பின்போது, 2010-ம் ஆண்டில் எனது கணவர் தொடங்கிய ‘கிரீன் கலாம்’ என்ற ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டம் குறித்து பேசினேன். அந்தத் திட்டத்துக்கு ஆதரவு அளிக்கும்படி முதல்வரிடம் கேட்டுக்கொண்டேன். அரசு ஆதரவு அளிக்கும் என்று முதல்வர் உறுதி அளித்தார். மேலும், குடும்பத்தைப் பற்றியும் அவர் அன்புடன் விசாரித்தார். விவேக், 2021-ம் ஆண்டு வரை 11 ஆண்டுகளில் 37 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதன்பின்னர் கடந்த 5 ஆண்டுகளில் 80 ஆயிரம் மரக்கன்றுகளை மட்டுமே நான் நட்டுள்ளேன். தாமதமாகத்தான் செயல்பட்டு வருகிறேன். தொடர்ந்து இந்தப் பணியைச் செயல்படுத்துவோம்” என்றார்.














