
சென்னை, நவ. 20-
தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்நாடு தொழில்நுட்பப் பரிமாற்ற மாநாடு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. மாநாட்டைத் தொடங்கிவைத்து உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் பேசியதாவது: உயர்கல்வித் துறை செயலரின் ஆலோசனையை ஏற்று, இந்த மாநாடு இனிமேல் ஆண்டுதோறும் நடத்தப்படும். சென்னையில் மட்டுமின்றி மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களிலும் மாநாடு நடத்தப்படும். மத்திய அரசின் நிதி ஆயோக் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி, தமிழகம் 16,046 காப்புரிமை விண்ணப்பங்களைச் சமர்ப்பித்ததிலும், 44,611 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டதிலும் முதலிடத்தில் உள்ளது. புதிய கண்டுபிடிப்புகள் உற்பத்தி நிலையை எட்டி மக்களைச் சென்றடைய காப்புரிமை பெறுவது அவசியம்.
அதற்குத் தமிழ்நாடு மாநில அறிவியல் ஆராய்ச்சி கவுன்சில் பல்வேறு வழிகளில் உதவி வருகிறது என்றார்.
உயர்கல்வித் துறை செயலர் தீரஜ்குமார் பேசுகையில், “தொழில்நுட்ப மேம்பாடு முக்கியமானது.
அதேநேரம், தொழில்நுட்பங்கள் வணிக ரீதியில் உற்பத்தி நிலையை அடைவதும் முக்கியம். சீனாவில் 80 முதல் 90 சதவீத தொழில்நுட்பங்கள் உற்பத்தி நிலையை அடைந்து விடுகின்றன” என்றார்.














