
சான் பிரான்சிஸ்கோ, நவ. 21-
‘கிளாட்’ செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை உருவாக்கிய ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு (ஐபிஓ) மூலம், அந்நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாகியுள்ளனர்.நிதி தொழில்நுட்ப நிறுவனமான ஹில்.காம் வெளியிட்ட மதிப்பீடுகளை மேற்கோள்காட்டி சிஎன்என் வெளியிட்ட செய்தியில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆந்த்ரோபிக் நிறுவனத்தில் பணியாற்றும் மொத்தம் 5,300 ஊழியர்களில் சுமார் 5,100 பேரிடம், அதாவது 96 சதவீதம் பேரிடம், 1 மில்லியன் டாலருக்கும் (சுமார் ரூ.9.25 கோடி) அதிகமான மதிப்புள்ள பங்குகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல், சுமார் 2,800 ஊழியர்கள், அதாவது நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், குறைந்தபட்சம் 10 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை வைத்துள்ளனர். நிறுவனத்தின் நிறுவனர் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்லாத சாதாரண ஊழியர்களில் சுமார் 600 பேரிடம் 100 மில்லியன் டாலர் (சுமார் ரூ.925 கோடி) அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள பங்குகள் உள்ளன. இதன்படி, நிறுவனத்தின் ஒவ்வொரு 9 ஊழியர்களில் ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் சொத்து மதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. ஐபிஓவுக்குப் பிறகு, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் 7 இணை நிறுவனர்களின் மொத்த பங்கு மதிப்பு 139 பில்லியன் டாலரைத் தாண்டியுள்ளது. நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டாரியோ அமோடியிடம் 20.07 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் உள்ளன. டாம் பிரவுனிடம் 20 பில்லியன் டாலர், சாம் மெக்கண்ட்லிஷிடம் 19.92 பில்லியன் டாலர், கிறிஸ்டோபர் ஓலாவிடம் 19.90 பில்லியன் டாலர், நிறுவனத் தலைவர் டேனியலா அமோடியிடம் 19.76 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி கிருஷ்ணா ராவிடம் சுமார் 788.3 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகள் உள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.















