
வாஷிங்டன், நவ. 20-
சீன உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததாக என்விடியா தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
அந்தப் பெண், ஜென்சன் மூலம் என்விடியா நிறுவனத்திடம் இருந்து சிப்களை வாங்கி சீனாவுக்கு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் பதவி விலகினார்.இந்நிலையில், அமெரிக்க அரசே சீனாவுக்கு சுமார் 9 லட்சம் சிப்களை ஏற்றுமதி செய்ய அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்தது தற்போது தெரியவந்துள்ளது.
2025 டிசம்பர் முதல் 2026 மே வரையிலான ஆறு மாதங்களில், சீனாவுக்கு சிப்களை ஏற்றுமதி செய்ய அமெரிக்க வர்த்தகத் துறை ஒப்புதல் அளித்துள்ளது.அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுக் குழுத் தலைவர் பிரையன் மாஸ்ட், ஏற்றுமதி கட்டுப்பாட்டு சீர்திருத்தச் சட்டத்தின் கீழ் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்த ரகசிய உரிமை ஆவணங்களை நேற்று பொதுவெளியில் வெளியிட்டார்.என்விடியா மற்றும் ஏஎம்டி நிறுவனங்களின் சிப்களை சீனாவுக்கு விற்பனை செய்ய 34 லட்சம் விண்ணப்பங்கள் வந்த நிலையில், 8,79,868 சிப்களுக்கு மட்டுமே அமெரிக்க வர்த்தகத் துறையின் தொழில் மற்றும் பாதுகாப்புப் பணியகம் அனுமதி வழங்கியுள்ளது. இதில் என்விடியாவின் மேம்பட்ட H200 சிப்கள் மற்றும் அதற்கு இணையான ஏஎம்டியின் MI325X சிப்களும் அடங்கும். அனுமதி பெற்ற நிறுவனங்களில் பல, சீன ராணுவத்துடன் தொடர்புடையவை என அமெரிக்க பாதுகாப்புத் துறையால் பட்டியலிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும், அவற்றுக்கு சிப்களை ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,
என்விடியாவின் உரிமை விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள maginfra, New Matrix ஆகியவை சிப்களை சீனாவுக்கு கடத்தப் பயன்படுத்தப்படும் போலி நிறுவனங்களாக இருக்கலாம் என நாடாளுமன்றக் குழு சந்தேகம் தெரிவித்துள்ளது.















