
ஆவடி, நவ. 22-
திருமுல்லைவாயல் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் மணி (67). தனியார் நிறுவனம் நடத்தி வரும் இவருக்கு, கடந்த ஜூலை மாதம் சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்த மீனா (41), சங்கர் ஆகியோர் அறிமுகமாகினர். சமையல் பருப்பைத் தூய்மை செய்யும் இயந்திரத்தை வாங்கி, அதன் மூலம் தொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று அவர்கள் மணியிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சமையல் பருப்பைத் தூய்மை செய்யும் தொழிலில் ஈடுபட மணி திட்டமிட்டார். இயந்திரம் வாங்குவதற்காக தனியார் நிறுவனத்திடம் இருந்து விலைப்பட்டியல் பெற்று, வங்கிக் கடன் பெறும் நோக்கில் அதை வங்கிக்கு அனுப்பினார். இந்த நிலையில், மீனாவும் சங்கரும், மணிக்கு தெரியாமல் அவரது நிறுவன மின்னஞ்சலை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த மின்னஞ்சல் மூலம், வேறொரு தனியார் நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட விலைப்பட்டியல் ஒன்றை வங்கிக்கு மீண்டும் அனுப்பியுள்ளனர். அந்த விலைப்பட்டியலின் அடிப்படையில், வங்கியில் இருந்து சுமார் ரூ.2.65 கோடி பெறப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஆனால், மணி நம்பியபடி சமையல் பருப்பைத் தூய்மை செய்யும் இயந்திரத்தை வாங்கித் தராமல், வங்கியில் இருந்து பெறப்பட்ட முழுத் தொகையையும் மீனாவும் சங்கரும் கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் மோசடியில் ஈடுபட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.













