
புதுடெல்லி, நவ. 23-
நம் ராணுவம், விமானப்படை, கடற்படையில் இளைஞர்களை பணியமர்த்தும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘அக்னிபாத்’ திட்டத்தை 2022 செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், 17.5 முதல் 21 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும், நான்கு ஆண்டுகளுக்கு முப்படைகளில் பணியமர்த்தப்படுகின்றனர். அவர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுகின்றனர்.
நான்கு ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்பவர்களில், திறன் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவர். மீதமுள்ள 75 சதவீதம் பேர் பணியில் இருந்து விடுவிக்கப்படுவர்.இந்நிலையில், அக்னிபாத் திட்டத்தில் மத்திய அரசு சில மாற்றங்களைச் செய்துள்ளது. நான்கு ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்தும் நிரந்தரப் பணி கிடைக்காத 75 சதவீத அக்னி வீரர்களுக்கு,
மேலும் இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலத்தில் குறிப்பிட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்து, தொடர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்கப்படும். அக்னி வீரர்களின் முதல் பிரிவினர் பணியில் இருந்து வெளியேற இருந்த நிலையில் இந்த மாற்றம் அமலுக்கு வந்துள்ளது.
இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்தே பல்வேறு காரணங்களுக்காக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற மூத்த ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், மத்திய அரசு திட்டம் சிறப்பானது என்றும், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும் என்றும் கூறி வந்தது.













