
சென்னை: நவ. 23-
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் தமிழகத்தில் 1,461 ஏரிகள் வறண்டுள்ளன. மாநிலத்தில் உள்ள அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் 36.40 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது.
தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி. ஆகும். இதில் மேட்டூர், பவானிசாகர் உள்ளிட்ட 15 முக்கிய அணைகளின் கொள்ளளவு 198 டி.எம்.சி. ஆகும். தற்போது 90 அணைகளிலும் சேர்த்து 81.65 டி.எம்.சி. (36.40 சதவீதம்) நீர் மட்டுமே உள்ளது.
மேட்டூர் அணையில் 25.84 டி.எம்.சி., பவானிசாகரில் 15.23, பரம்பிக்குளத்தில் 8.80, சாத்தனூரில் 4.18, வைகையில் 2.64, பெரியாறில் 2.57, பேச்சிப்பாறையில் 2.16, பாபநாசத்தில் 1.95, அமராவதியில் 1.70, மணிமுத்தாறில் 1.65, கிருஷ்ணகிரி அணையில் 1.34 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. ஆழியாறு, சோலையாறு, பெருஞ்சாணி அணைகளில் தலா 1 டி.எம்.சி.க்கும் குறைவாகவே நீர் உள்ளது.மாநிலத்தில் உள்ள 14,141 பாசன ஏரிகளில் 763 மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளன. இதில் கன்னியாகுமரியில் அதிகபட்சமாக 564 ஏரிகள் நிரம்பியுள்ளன.
மேலும், 908 ஏரிகள் 76 முதல் 99 சதவீதமும், 1,235 ஏரிகள் 51 முதல் 75 சதவீதமும், 2,181 ஏரிகள் 26 முதல் 50 சதவீதமும், 7,593 ஏரிகள் 1 முதல் 25 சதவீதமும் நிரம்பியுள்ளன. நெல்லையில் 236, சிவகங்கையில் 139 ஏரிகள் உள்பட மாநிலம் முழுவதும் 1,461 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளன.













