
புதுடெல்லி: நவ. 23-
டெல்லியில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் இந்தியா–பாகிஸ்தான் இடையே அதிகாரப்பூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று மத்திய கலாசாரச் செயலாளர் விவேக் அகர்வால் தெரிவித்தார்.சீனாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாகரிகங்களுக்கு இடையிலான உரையாடலை மேற்கொள்வதற்காக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கீழ் தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார். இதையடுத்து, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நாகரிக உரையாடல் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இந்த கூட்டமைப்பின் 3 நாள் கூட்டம் டெல்லியில் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் அறிஞர்கள், கல்வியாளர்கள், நிபுணர்கள் மற்றும் கலாசார பிரதிநிதிகள் பங்கேற்றனர். உறுப்பு நாடுகளுக்கு இடையே கலாசார நாகரிகத்தைப் பகிர்ந்து கொள்வது தொடர்பாக அவர்கள் ஆய்வு செய்தனர். பாகிஸ்தான் மந்திரி முசாதிக் மாலிக் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நிருபர்களைச் சந்தித்த மத்திய கலாசாரச் செயலாளர் விவேக் அகர்வாலிடம், இந்தியா–பாகிஸ்தான் இடையே அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடைபெற்றதா என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “அதிகாரப்பூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. இருப்பினும், விருந்தின்போது பாகிஸ்தான் மந்திரியுடன் இந்திய தரப்பு உறுப்பினர்கள் உரையாடினர். கூட்டத்திலும் அவருடன் உரையாடினர்” என்று தெரிவித்தார். சட்டவிரோத ஆள்கடத்தல் மற்றும் இயற்கை சீற்றங்களிலிருந்து பாரம்பரியத்தைப் பாதுகாக்க வேண்டும்; கலாசார பாரம்பரியத்தை அணுகுவதில் செயற்கை நுண்ணறிவை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாகரிகத்தையும் சமமான குரலாக மதிப்பது, கட்டிடக்கலை, இசை, உணவு, ஜவுளி உள்ளிட்ட துறைகளில் மரபுகளைப் பகிர்வது, யுனெஸ்கோ பாரம்பரிய அமைப்புக்கு உறுப்பு நாடுகள் கூட்டாகப் பரிந்துரைகளை அனுப்புவது உள்ளிட்ட அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளன.














