Home மாவட்டங்கள் சென்னை நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைப்பு

நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைப்பு

நெல்லை: நவ. 24-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். நெல்லை பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீசார், அவரது இல்லத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
திருக்கார்த்திகை தீபத்திருநாள் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களிலும், வீடுகளிலும் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுதொடர்பாக இந்து தமிழர் கட்சி நிறுவனர் ராம.ரவிக்குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை உறுதி செய்தது. இந்தத் தீர்ப்புக்கு தடை கோரி தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, பல்வேறு நிபந்தனைகளுடன் இந்த ஆண்டு மட்டும் திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு சீராய்வு மனுவும் தாக்கல் செய்தது. அந்த மனுவை விரைந்து விசாரிக்கக் கோரி நேற்று முறையிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட அமர்விலும், தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்விலும் முறையிடப்படவில்லை. குருநானக் ஜெயந்தியையொட்டி சுப்ரீம் கோர்ட்டுக்கு இன்று விடுமுறை என்பதால், மனு மீதான விசாரணைக்கு வாய்ப்பு இல்லை. இதற்கிடையே, திருப்பரங்குன்றம் விவகாரத்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி மதுரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்சி நிர்வாகிகளுடன் திருப்பரங்குன்றம் செல்ல இருந்த நயினார் நாகேந்திரன், இதையடுத்து வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.