
இஸ்லாமாபாத்: நவ. 25-
பாகிஸ்தானின் சிந்து உள்ளிட்ட மாகாணங்களைப் பிரித்து புதிய மாகாணங்களை உருவாக்கும் திட்டத்துக்கு எதிராக, அந்நாட்டின் முக்கிய வர்த்தக நகரான கராச்சியில் பல்லாயிரக்கணக்கான சிந்து தேசியவாதிகள் பேரணி நடத்தினர்.
பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசீம் முனீரும், அவரது நெருங்கிய சகாவும் அந்நாட்டு உள்துறை அமைச்சருமான மொஹ்சின் நக்வியும், சிந்து உள்ளிட்ட மாகாணங்களைப் பிரித்து புதிய மாகாணங்களை உருவாக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிந்து தேசியவாதிகள் கராச்சியில் பிரம்மாண்டப் பேரணியில் பங்கேற்றனர்.
பாரம்பரிய சிந்தி தொப்பி மற்றும் ‘அஜ்ரக்’ சால்வை அணிந்த போராட்டக்காரர்கள், வண்ணமயமான பேருந்துகளில் கராச்சிக்கு திரண்டு வந்தனர். சிந்து மாகாணத்தைப் பிரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அவர்கள் முழக்கமிட்டனர். பேரணியில் பங்கேற்றவர்கள், சிந்துவின் ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
சிந்து தேசியவாத அமைப்பான ‘ஜியே சிந்து முத்தாஹிதா மகாஸ்’, தனி சிந்துதேஷ் கோரிக்கையை முன்வைத்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் அதிகாரமிக்க பஞ்சாப் மாகாணத்துக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சிந்து மாகாணத்தின் முக்கியக் கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ-சர்தாரியும், சிந்துவைப் பிரிக்கும் எந்தவொரு முயற்சிக்கும் ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். “இந்த நடவடிக்கை சிந்து மக்கள் ஆயுதம் ஏந்துவதற்கும், கராச்சி மற்றும் ஹைதராபாத் வீதிகளில் ரத்த ஆறு ஓடுவதற்கும் வழிவகுக்கும்” என்று அவர் எச்சரித்தார்.
பாகிஸ்தானில் தற்போது 4 மாகாணங்கள் உள்ளன. அவற்றை 12 முதல் 15 மாகாணங்களாகப் பிரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுவாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக 2026-ம் ஆண்டு இறுதிக்குள் முடிவு எடுக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.
















