Home மாவட்டங்கள் சென்னை ரூ.1,020 கோடி ஊழல் புகார்: நேரு சகோதரர் உதவியாளர் கைது

ரூ.1,020 கோடி ஊழல் புகார்: நேரு சகோதரர் உதவியாளர் கைது

சென்னை: நவ. 26-
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு பதவி வகித்தார். அந்தத் துறையில் டெண்டர் ஒதுக்கீடு, பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல்களில் ரூ.1,020 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்பட 25 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின்போது 170 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விசாரணைக்காக நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனின் உதவியாளர் கவிபிரசாத் கைது செய்யப்பட்டார். டெண்டர் ஒதுக்கீடு, பணி நியமனம் மற்றும் பணியிட மாறுதல்களில் கூறப்பட்டுள்ள முறைகேடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் மேலும் யார் யாருக்கு தொடர்பு உள்ளது, டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடுகள் எந்த வகையில் நடைபெற்றன என்பதையும் கண்டறிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.