Home விளையாட்டு தொடக்கத்தை வீணடித்த திலக் வர்மா

தொடக்கத்தை வீணடித்த திலக் வர்மா

தோஹா, நவ. 27- தோஹாவில் நடைபெறும் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை ஒருநாள் தொடர் அரையிறுதியில் திலக் வர்மா தலைமையிலான இந்தியா ஏ அணியை இலங்கை ஏ அணி பந்தாடியது என்றுதான் கூற வேண்டும். 350+ ரன்கள் எடுக்க வேண்டிய பிட்சில் இந்தியா ஏ 317 ரன்களையே எடுக்க இலங்கை அணியில் தொடக்க வீரர்கள் லசித் குரூஸ்புள்ளே (116), சினேஷ் ஜெயவர்தெனா (105) இருவரும் சதம் எடுக்க 51 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலங்கை ஏ அணி 318/2 என்று அபார வெற்றி பெற்று இறுதிக்குள் நுழைந்தது. எப்படி அன்று பாகிஸ்தான் எடுத்த 313 ரன்களை விரட்ட முடியாமல் வெற்றியை திலக் வர்மாவின் 149 பந்துகள் சதம் என்ற இன்னிங்ஸ் தடுப்புச் சுவராக நின்றதோ நேற்றும் சூரியவன்ஷி கொடுத்த அதிரடி தொடக்கத்தை திலக் வர்மா வீணடித்தார். 66 பந்துகளில் 53 ரன்கள் என்று அவர் படுமந்தமாக ஆடினார். வேண்டுமென்றேதான் அப்படி ஆடுகிறார், நிச்சயம் சுயநலமியாக ஆடுகிறார். திலக் வர்மாவின் கேப்டன்சி நிச்சயம் படுமோசம் என்பதில் இருவேறு கருத்துக்கள் இல்லை, பிட்சை சரியாக எடைபோடத் தெரியவில்லை. டாஸ் வென்று நேற்று பேட்டிங்கைத் தேர்வு செய்தார். காரணம், இரண்டாவது இன்னிங்சில் பிட்ச் உடையும் என்று எதிர்பார்த்தார் அது நடக்கவே இல்லை. மேலும் அன்று பாகிஸ்தானுக்கு எதிராக 313 ரன்களை இவரது ஆமைவேக பேட்டிங்கினால்தான் சேஸ் செய்ய முடியவில்லை என்பதை மறுக்கும் விதமாக நேற்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். அன்று பாகிஸ்தானுக்கு எதிராக சேஸ் செய்ய முடியாமல் தோற்ற அதே பிட்ச்தான் இது. மாறவேயில்லை. வைபவ் சூரியவன்ஷியின் 27 பந்துகள் 40 ரன்களும் அபிஷேக் சர்மாவின் அதிரடியும் 8 ஓவர்களில் 80 ரன்கள் என்ற டி20 ரக ஸ்டார்ட்டை இந்திய அணிக்குக் கொடுத்தது, ஆனால் அந்தத் தொடக்கத்தை திலக் வர்மா மேன்மேலும் கொண்டு செல்லவே இல்லை. ஓவருக்கு 8 ரன்கள் என்ற தொடக்கம் 6 ரன்களாகக் குறைந்து கடைசியில் 40 ஓவர்களில் 235 என்று 6 ரன்களுக்கும் கீழ் குறைந்ததற்குக் காரணம் திலக் வர்மா போட்டியின் உத்வேகத்தையும் அதன் விறுவிறுப்பையும் தன் ஆமைவேக பேட்டிங்கினால் குறைத்ததே 66 பந்துகளில் சதம் எடுக்க வேண்டாம் குறைந்தது 66 பந்துகளில் 80 ரன்களையாவது எடுப்பதுதானே முறை. அதுவும் இந்த மட்டைப் பிட்சில் இவர் ஆடுவதைப் பார்த்தால் ஏதோ கிரீன் டாப் பிட்சில் தட்டுத் தடுமாறி ஆடுவது போல் ஆடுகிறார்.