
சென்னை: நவ. 27-
தமிழகத்தில் வீடுகளுக்கான புதிய சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கும் பணி கடந்த 8 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். புதிய இணைப்பு கேட்டு கேஸ் ஏஜென்சிகளுக்குச் செல்லும் பலரும், இணைப்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் கேஸ் சிலிண்டர்களை வினியோகம் செய்து வருகின்றன. இந்த நிறுவனங்களின் ஏஜென்சிகள் மூலமாகவே வீடுகளுக்கு கேஸ் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் மேற்காசிய நாடுகளில் ஏற்பட்ட போர் காரணமாக, கச்சா எண்ணெய் மற்றும் சமையல் கேஸ் ஏற்றிச் சென்ற கப்பல்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக சமையல் கேஸ் சிலிண்டர் வினியோகத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது வீடுகளுக்கான புதிய கேஸ் இணைப்பு வழங்கும் பணியும் நிறுத்தப்பட்டது.
பின்னர் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, ஜூலை மாதம் முதல் கேஸ் வினியோகத்துக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. இருப்பினும், அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும், புதிய கேஸ் இணைப்பு வழங்கும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனால், புதிய இணைப்பு பெறுவதற்காக ஏஜென்சிகளுக்கு வரும் பொதுமக்கள் தொடர்ந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய சமையல் கேஸ் இணைப்புகளை வழங்குவதற்கான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.













