Home செய்திகள் தேசிய செய்திகள் பி.எப். பணத்தை யு.பி.ஐ. மூலம் எடுக்கலாம்

பி.எப். பணத்தை யு.பி.ஐ. மூலம் எடுக்கலாம்

புதுடெல்லி: நவ. 27-
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) கணக்கில் இருந்து யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதி அடுத்த மாதம் (டிசம்பர்) இறுதிக்குள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இ.பி.எப். உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட இணையதளத்தில் பல்வேறு விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் சிரமத்தை குறைக்கும் வகையில், யு.பி.ஐ. மூலம் பணம் எடுக்கும் வசதியை கொண்டுவர வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்த புதிய வசதிக்கான தொழில்நுட்பப் பணிகள் நிறைவடைந்துள்ளன. பாதுகாப்பு மற்றும் செயல்திறன் சோதனைகளும் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பயனாளர்களை கொண்டு இரண்டு கட்ட சோதனைகளும் முடிக்கப்பட்டுள்ளன.
சோதனையின்போது 102 வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் முன்வைத்த கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டன. சுமார் ரூ.5 லட்சம் தொகை பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் உடனடியாக வரவு வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிய தொகைகளை அடிக்கடி எடுப்பதால் ஏற்படும் பரிவர்த்தனைச் சுமையை குறைக்கும் வகையில், குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகையாக ரூ.1,000 நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணப்பரிவர்த்தனை ‘பீம்’ செயலி மூலம் மேற்கொள்ளப்படும். இதற்காக தேசிய பணப்பரிவர்த்தனை கழகம், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
யு.பி.ஐ. வசதி நடைமுறைக்கு வந்தால், வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஒப்புதலைப் பெறுவதற்கும், வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கும் ஆகும் காலதாமதம் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.