Home செய்திகள் தேசிய செய்திகள் பிஹார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்

பிஹார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள்

பாட்னா, நவ. 28-
பிஹார் மாநிலம் மோகாமா தொகுதி எம்எல்ஏ அனந்த் சிங்கின் இளைய மகள் ஷிவாங்கி மற்றும் ரிஷிகேஷ் குமார் திருமணம், பாட்னாவில் உள்ள அனந்த் சிங்கின் பூர்வீக கிராமமான நட்வானில் 5 நாட்கள் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த ஆடம்பரத் திருமணம் சர்வதேச ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களில் ஒன்றான பிஹாரில், பல குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ள மக்கள் பிரதிநிதி நடத்திய இந்தத் திருமணம், ‘அரச குடும்பத் திருமணம்’ என ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் விருந்தினர்களுக்கு விருந்தளித்த அரசியல்வாதி என்ற தலைப்பிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த நவம்பர் 25-ம் தேதி நடைபெற்ற திருமண விழாவையொட்டி, விழா அரங்கம் திருவிழா கோலம் பூண்டிருந்தது. 6.2 ஏக்கர் பரப்பளவில் ஜெய்ப்பூர் அரண்மனை பாணியில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. அதனுடன் பெரிய மேடை மற்றும் வெளிநாட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விருந்தினர்களின் வருகைக்காக 5 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டிருந்தன.
திருமண விழாவில் லட்சக்கணக்கான விருந்தினர்கள் பங்கேற்றதுடன், குதிரைப் பந்தயம், பிரம்மாண்ட விருந்து மற்றும் சொகுசு கார்கள் இடம்பெற்றன. பிஹார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் டெல்லியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குதிரைகள் பங்கேற்ற பந்தயமும் நடைபெற்றது. இதில் முதல் பரிசாக ‘தார்’ ஜீப்பும், அடுத்தடுத்த பரிசுகளாக மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரும் அறிவிக்கப்பட்டன.
விருந்தினர்களுக்கான உணவு ஏற்பாடுகளில் 500 சமையல்காரர்கள் ஈடுபட்டனர். 300-க்கும் மேற்பட்ட சமையல் கூடங்களில் 150-க்கும் அதிகமான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டன. எனினும், கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக உணவு பரிமாறுவதில் கடும் குழப்பம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.