
காசி: நவ. 28-
தமிழ் மிகப் பழமையான மொழியாகவும், காசி மிகப் பழமையான நகரமாகவும் திகழ்கின்றன. இவ்விரண்டையும் இணைக்கும் விழாவாக காசி தமிழ்ச் சங்கமம் அமைந்துள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.தமிழகத்துக்கும் காசிக்கும் இடையிலான பழமையான பண்பாட்டு, ஆன்மிக உறவை இந்தச் சங்கமம் கொண்டாடுகிறது. தமிழர்கள் ராமேஸ்வரத்தில் நீராடி மணலை கங்கையில் விடுவதும், கங்கை நீரை ராமநாதசுவாமி கோயிலுக்குக் கொண்டு வருவதும் இந்த உறவின் அடையாளங்கள். அதேபோல், காசி மக்களும் ராமேஸ்வரத்துக்கு யாத்திரை செல்கின்றனர். தென்காசி, விருத்தாசலம் (விருத்த காசி), அவிநாசி ஆகிய ஊர்களின் பெயர்களிலும் காசியுடனான பழைய தொடர்பு வெளிப்படுகிறது.
காசியின் கருத்துகள் காஞ்சியிலும், காஞ்சியின் சிந்தனைகள் காசியிலும் பரிமாறப்பட வேண்டும் என்பது பாரதியாரின் கனவு. அந்தக் கனவை நனவாக்கும் முயற்சியாக காசி தமிழ்ச் சங்கமத்தைப் பார்க்கிறேன் என்று சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
காசி தமிழ்ச் சங்கமம் 2022-ல் தொடங்கப்பட்டது. தமிழகமும் காசியும் பல ஆண்டுகளாகப் பகிர்ந்து கொண்ட அறிவு, பண்பாடு ஆகியவற்றை நினைவுகூர்ந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதே இதன் நோக்கம். முதல் சங்கமம் இரு பகுதிகளின் வரலாற்றுத் தொடர்பை எடுத்துரைத்தது. இரண்டாவது சங்கமம் கல்வி, இலக்கியம், கலை, அறிவியல், தொழில்நுட்பப் பரிமாற்றத்தை விரிவுபடுத்தியது. மூன்றாவது சங்கமம் அகத்திய முனிவர் மரபையும் இந்தியாவின் பழைய அறிவையும் முன்னிறுத்தியது. நான்காவது சங்கமம் “தமிழ் கற்கலாம்” திட்டத்தின் மூலம் காசி மாணவர்கள் தமிழ் கற்கவும், தமிழக மக்கள் காசி பண்பாட்டை அறியவும் வாய்ப்பளித்தது.
திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய வாழ்வியல் விழுமியங்களை விளக்கும் உலகப் பொதுமறை. இது முதல் இரண்டு சங்கமங்களில் முறையே 13 மற்றும் 16 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நிலையில், இம்முறை 50 மொழிகளில், அதில் 10 வெளிநாட்டு மொழிகள் அடங்க, மொழிபெயர்க்கப்படுகிறது.முதல் சங்கமத்தில் தமிழகத்திலிருந்து 2,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இம்முறை மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், ஆன்மிகப் பெரியவர்கள் உள்ளிட்ட சுமார் 1,400 பேர் பங்கேற்கின்றனர். இது ஒரு நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், நீடித்த பண்பாட்டுத் தொடர்புகளை உருவாக்கும் இயக்கமாக மாறியுள்ளது. இந்திய ஒற்றுமை பகிர்ந்த வரலாறு, ஆன்மிகம், பண்பாடு, மனிதநேயம் ஆகியவற்றாலும் உருவாகிறது. கங்கை மற்றும் காவிரி வெவ்வேறு பகுதிகளில் ஓடினாலும், ஒரே நாகரிகத்தை வெளிப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.













