
வாஷிங்டன், செப். 28- ஈரான் முன்வைத்த புதிய போர் நிறுத்தத் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிராகரித்ததற்கான காரணத்தை, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்கு முன்பாகவே ஈரான் பல்வேறு சலுகைகளை அமெரிக்காவிடம் கோரியதாக அவர் கூறினார். ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குதல், பொருளாதாரத் தடைகளைத் தளர்த்துதல், பல பில்லியன் டாலர் மதிப்பிலான முடக்கப்பட்ட சொத்துகளை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஈரான் முன்வைத்ததாக வால்ட்ஸ் தெரிவித்தார். இதுகுறித்து செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்காகவே இத்தகைய கோரிக்கைகளை முன்வைத்தது ஏற்க முடியாதது என டிரம்ப் கருதினார். ஈரான் அளிக்கும் உறுதிமொழிகளை அமெரிக்கா நம்பவில்லை. சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட அனுபவத்துக்குப் பிறகு, டிரம்புக்கு ஈரான் மீது அதிக நம்பிக்கை இல்லை. அதேநேரத்தில், இந்த மோதலுக்கு இறுதியில் ஏதேனும் ஓர் உடன்பாடு மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் டிரம்ப் உறுதியாக உள்ளார்.














