Home செய்திகள் உலக செய்திகள் பிரான்ஸ் கலவரங்களுக்கு புலம்பெயர்ந்தோர் காரணமல்ல

பிரான்ஸ் கலவரங்களுக்கு புலம்பெயர்ந்தோர் காரணமல்ல

தோஹா, கத்தார், அக். 22-
பிரான்ஸில் நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் கலவரங்களுக்கு இஸ்லாமிய புலம்பெயர்ந்தோரே காரணம் என்ற குற்றச்சாட்டு முற்றிலும் முட்டாள்தனமானது என்று அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் விலைவாசி கடுமையாக உயர்ந்ததைக் கண்டித்து நடைபெற்ற போராட்டங்கள் பின்னர் கலவரங்களாக மாறின. இதனால் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களும் நடந்தன. அந்நாட்டில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், வளைகுடாவின் முக்கிய எரிசக்தி விநியோக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மேக்ரான், பயணத்தின் இறுதியாக கத்தாருக்கு வந்தார். அப்போது செய்தியாளர்கள், “பிரான்ஸில் நடந்த கலவரங்களுக்கு இஸ்லாமிய புலம்பெயர்ந்தோரே காரணம் என்றும், எல்லைகளை மூடி நிலைமை கைமீறுவதற்கு முன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளாரே?” என்று கேட்டனர். அதற்கு மேக்ரான், “கடந்த வார இறுதியில் பாரிஸிலும், பிரான்ஸின் பிற நகரங்களிலும் நடந்த சம்பவங்களை சில வெளிநாடுகள் திட்டமிட்டு திரிக்கின்றன. இதன் விளைவாக, வெளிநாட்டுத் தலைவர்கள் உள்பட பலர் ஏற்றுக்கொள்ள முடியாத, முற்றிலும் முட்டாள்தனமான கருத்துகளை தெரிவித்துள்ளனர்” என்றார். ட்ரம்ப்பையும் குறிப்பிடுகிறீர்களா என்று கேட்டபோது, “வெளிநாட்டுத் தலைவர்கள் பலரில் அவரும் ஒருவர்” என்று பதிலளித்தார். மேலும் அவர் கூறுகையில், “பிரான்ஸில் நடக்காத சம்பவங்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்டுள்ளன. புலம்பெயர்ந்தவர்களும் இஸ்லாமியர்களும் பிரான்ஸ் மீது படையெடுத்துவிட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய்யான தகவல். பிரான்ஸை அவதூறாகப் பேசுபவர்களுக்கு அந்நாட்டின் மீது அன்பு இல்லை” என்றார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் சில தலைவர்கள், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களை அறியாமலேயே பகிர்வதாகவும், சில தரப்பினர் பரப்பும் கருத்துகளை அப்படியே முன்வைத்து, தங்கள் அரசியல் பிரச்சாரங்களுக்காக பிரான்ஸைப் பயன்படுத்துவதாகவும் மேக்ரான் குற்றம்சாட்டினார்.