
பெங்களூர்: அக். 22-
பெங்களூரு புலிகேசி நகர்
குண்டுவெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்கவுள்ள நிலையில், ஐ.இ.டி. வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு புலிகேசி நகரில் 20-ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில், ஐந்து மாடி கட்டிடக் கட்டுமானப் பணியின்போது பேட்டரியை ஆன் செய்தபோது திடீரென பயங்கரச் சத்தத்துடன் குண்டுவெடித்தது. இதில் அல்லாவுதீன், நரேஷ் ஆகிய இரு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து புலிகேசி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கட்டிடத்திற்குள் ஒரு பார்சலை வைக்குமாறு செக்யூரிட்டி கார்டுக்கு போன் கால் வந்துள்ளது. அதன்படி, காவலாளியும் பெயிண்டரும் இணைந்து அந்தப் பார்சலைத் திறக்க முயன்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் குழுவினரும், தடயவியல் (எஃப்.எஸ்.எல்.) நிபுணர்களும், பாம் ஸ்காட் மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு (ஏ.டி.சி.) போலீசாரும் தீவிர சோதனை நடத்தி மாதிரிகளைச் சேகரித்துள்ளனர். மூன்று பேட்டரிகளைப் பயன்படுத்தி இந்த வெடிபொருள் சாதனம் இயக்கப்பட்டதா என்பது குறித்து தடயவியல் அறிக்கை வந்த பின்னரே முழு விவரம் தெரியவரும்.
தற்போது உள்ளூர் போலீசாரும் ஏ.டி.சி. அதிகாரிகளும் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தடயவியல் அறிக்கை மற்றும் கள ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக விசாரணையைக் கையில் எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.













