
புதுடெல்லி, அக். 22:
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் (சிஜேபி) நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஆஜராகுமாறு டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நிலையில், இந்தச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தலைநகர் டெல்லியிலும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி, சிஜேபி உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டன. இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக சிஜேபி நிர்வாகிகளான சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்படி அவர்கள் இருவரும் திஹார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். பின்னர், அவர்களது தரப்பில் தனிநபர் பிணை மற்றும் அமைதிக்கான பிணைப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, 7 நாள் நீதிமன்றக் காவலுக்குப் பிறகு இருவருக்கும் டெல்லி சிறப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் டெல்லி ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் அக். 22-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். ஜந்தர் மந்தரில் தடையை மீறி போராட்டம் நடத்தியது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இந்தச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், சிஜேபி நிர்வாகி அஜிங்கியா ஷிண்டேவுக்கும் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.













