காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுகிறது

டெல்லி நவம்பர் , 16 – வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, வங்கக் கடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று மாறியது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுப்பெற்று நவம்பர் 18ம் தேதி காலை வங்கதேசத்தின் மோங்லா – கேபுபரா இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறு புயலாக வலுப்பெறும் பட்சத்தில் அதற்கு மாலத்தீவு நாடு பரிந்துரைத்த மிதிலி என பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வங்கக்கடலில் ஏற்கனவே 2 புயல்கள் உருவான நிலையில், 3வது புயலாகவும் வடகிழக்கு பருவமழை காலத்தில் முதலாவது புயலாகவும் உருவாகிறது. ஏற்கனவே வங்கக்கடலில் மே மாதம் மோக்கா புயலும் அக். மாதம் ஹாமூன் புயலும் உருவானது. இதனிடையே காற்றழுத்தம் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே நாகை, மயிலாடுதுறை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.