Home மாவட்டங்கள் பெங்களூர் கழிவுநீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

கழிவுநீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு: உறவினர்கள் போராட்டம்

திருப்பத்தூர்: நவ. 23-
வாணியம்பாடி அருகே தோல் தொழிற்சாலையில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியில் தவறி விழுந்து ஆபரேட்டர் பூவரசன் (29) உயிரிழந்தார். பூவரசன் உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருவதால் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் தோல் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த தோல் தொழிற்சாலையில் பூவரசன் (வயது 29) என்பவர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைய ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இன்று பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக அவர் கழிவுநீர் சுத்திகரிப்புத் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பூவரசன் உயிரிழந்த தகவலறிந்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொழிற்சாலை முன்பு திரண்டனர். தொழிற்சாலை நிர்வாகத்தின் அலட்சியமும், தொழிலாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததுமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், உரிய இழப்பீடு மற்றும் நடவடிக்கை கோரி பூவரசனின் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த வாணியம்பாடி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்களை சமாதானப்படுத்தி, பிரேத பரிசோதனைக்கு பிறகு உடலைப் பெற்றுக்கொள்ளுமாறு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.