Home மாவட்டங்கள் பெங்களூர் எலஹங்கா வீட்டிற்குச் செல்ல வந்த ஒய்.எஸ். ஷர்மிளாவை தடுத்து நிறுத்திய போலீசார்

எலஹங்கா வீட்டிற்குச் செல்ல வந்த ஒய்.எஸ். ஷர்மிளாவை தடுத்து நிறுத்திய போலீசார்

பெங்களூரு, நவ. 23-
ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா, நகரின் எலஹங்காவில் உள்ள அரண்மனை இல்லத்திற்குச் செல்ல வந்தபோது போலீசார் அவரைத் தடுத்து நிறுத்திய சம்பவம் நேற்று மாலை நடந்துள்ளது.
நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவைக் குறிப்பிட்டு போலீசார் ஷர்மிளாவின் வாகனங்களைத் தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாருக்கும், ஷர்மிளாவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஷர்மிளா தனது தாயார் ஒய்.எஸ். விஜயம்மா, மகன் ராஜா ரெட்டி மற்றும் மருமகள் பிரியா அத்தூரி ஆகியோருடன் ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பெங்களூரு வந்திருந்தார். விமான நிலையத்தில் இருந்து எலஹங்காவில் உள்ள குடும்ப இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, ஏர்போர்ஸ் கிராஸ் அருகே போலீசார் அவர்களின் வாகனங்களைத் தடுத்து நிறுத்தினர்.
போலீசார் தடுத்து நிறுத்தம்
எலஹங்காவில் உள்ள ‘எலஹங்கா பேலஸ்’ இல்லத்திற்குள் நுழையக் கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக போலீசார் ஷர்மிளாவிடம் தெரிவித்தனர். இதனால் அதிருப்தியடைந்த ஷர்மிளா, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “எனது சொந்த வீட்டிற்குச் செல்வதில் என்ன தவறு இருக்கிறது? என்னை ஏன் தடுக்கிறீர்கள்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த போலீசார், நீதிமன்ற உத்தரவை மதித்து நடக்குமாறு கேட்டுக்கொண்டனர். இதையடுத்து ஷர்மிளா அங்கிருந்து புறப்பட்டு நகரில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றிற்குச் சென்றதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
“நீதிமன்ற உத்தரவின்படி தடையுத்தரவு இருப்பதால் ஷர்மிளா தடுத்து நிறுத்தப்பட்டார். உத்தரவு நகலைக் காண்பித்த பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்” என்று துணை போலீஸ் கமிஷனர் (டிசிபி) ஜி.கே. மிதுன் குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
எலஹங்காவில் உள்ள குடும்ப இல்லம் தொடர்பான சொத்துத் தகராறு தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தேவனஹள்ளி மூத்த சிவில் நீதிபதி நீதிமன்றம், கடந்த நவம்பர் 21-ம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘சிலிக்கான் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தின் வசம் உள்ள சொத்தில் ஒய்.எஸ். ஷர்மிளா, அவரது குடும்பத்தினர், ஏஜெண்டுகள், பிரதிநிதிகள் அல்லது அவர் சார்பாகச் செயல்படும் எவரும் தலையிடக் கூடாது என இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிலிக்கான் பில்டர்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
சிலிக்கான் பில்டர்ஸ் குற்றச்சாட்டு
“சம்பந்தப்பட்ட சொத்தை குத்தகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாங்கள் சட்டப்பூர்வமாக எங்கள் வசம் வைத்துள்ளோம். ஆனால், ஒய்.எஸ். ஷர்மிளா மற்றும் அவர் சார்பாகச் செயல்படும் சிலர், அந்தச் சொத்தை ஆக்கிரமிக்கவும், அதில் தலையிடவும் முயற்சி செய்கின்றனர்” என்று சிலிக்கான் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.
இதன் காரணமாக அந்த நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது. வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவின் அடிப்படையிலேயே போலீசார் ஷர்மிளாவின் வருகையைத் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதன் மூலம் குடும்பச் சொத்துத் தகராறு மீண்டும் பொதுவெளியில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.
நவ. 25-ல் மகள் திருமணம்
இதற்கிடையில், ஷர்மிளாவின் மகள் ஒய்.எஸ். அஞ்சலி ரெட்டியின் திருமணம் வருகிற நவம்பர் 25-ம் தேதி நிச்சயிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பாரம்பரியப்படி பெங்களூரு எலஹங்கா அரண்மனையிலேயே திருமணத்தை நடத்த ஷர்மிளா திட்டமிட்டிருந்தார். இதற்காக அரண்மனை முகவரியையே திருமண அழைப்பிதழ்களில் அச்சிட்டு முக்கியப் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
ஆனால், இந்த முடிவுக்கு அவரது சகோதரர் ஜெகன் மோகன் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். தான் வசிக்கும் இல்லத்தில் திருமணம் நடந்தால், வெளியாட்கள் மற்றும் விருந்தினர்களின் நடமாட்டம் அதிகரித்து, தனது இசட் பிளஸ் (Z+) பாதுகாப்பிற்கும், குடும்பத்தின் தனிப்பட்ட ரகசியங்களுக்கும் பாதிப்பு ஏற்படும் எனக் கூறி அவர் ஆட்சேபனை தெரிவித்திருந்தார்.
ஐதராபாத்திற்கு மாற்றம்
சகோதரரின் எதிர்ப்பு மற்றும் மேலும் சர்ச்சைகள் வேண்டாம் என்ற காரணத்தால், ஷர்மிளா ஏற்கனவே தனது மகளின் திருமண இடத்தை பெங்களூருவில் இருந்து ஐதராபாத்திற்கு மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு வருவதற்கான திட்டம் இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எலஹங்கா அரண்மனையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.