
பெங்களூரு, நவ. 23-
தற்கொலைக் கடிதத்தில் (டெத் நோட்) அப்பா, அம்மா மற்றும் காதலியிடம் மன்னிப்பு கேட்டு எழுதி வைத்துவிட்டு பி.இ. மாணவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சோக சம்பவம் சிக்பள்ளாப்பூரில் நடந்துள்ளது. உயிரிழந்த மாணவர் சிந்தாமணியைச் சேர்ந்த மிதுன் (வயது 21) ஆவார்.
தனியார் கல்லூரியில் பொறியியல் (இன்ஜினியரிங்) படித்து வந்த மிதுன், சிக்பள்ளாப்பூர் நகரில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. டிப்போ எதிரே வாடகை அறையில் தங்கியிருந்தார். இந்த அறையில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கு முன்பு மிதுன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில், “எனது சாவுக்கு நானே காரணம். நான் நினைத்தது நடக்கவில்லை. அடுத்த ஜென்மத்தில் உங்கள் மகனாகப் பிறப்பேன்” என்று எழுதியுள்ளார். மேலும், தந்தை சீனிவாஸ், தாய் குசுமா மற்றும் தனது காதலியின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மிதுன் சிந்தாமணியைச் சேர்ந்த சீனிவாஸ் – குசுமா தம்பதியின் மகன் ஆவார். இதுகுறித்து தகவல் அறிந்த சிக்பள்ளாப்பூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாணவரின் மரணத்திற்கான சரியான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













