
சென்னை: நவ. 23-
தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) ஆட்சி, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நடைபெற்று வருகிறது. த.வெ.க. அமைச்சரவையில் இடம் பெறாத 2 கம்யூனிஸ்டு கட்சிகளும் ஆட்சியின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன. இதனால், த.வெ.க. அரசுக்கான ஆதரவை அக்கட்சிகள் எப்போது வேண்டுமானாலும் வாபஸ் பெறக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் நிலவுகிறது.
இதற்கிடையே, த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் முயற்சிகள் திரைமறைவில் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக த.வெ.க. எம்.எல்.ஏ.க்கள் இளையராஜா (ஊத்தங்கரை), முஸ்தபா (மதுரை மத்தி) ஆகியோர் வெளிப்படையாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத் திருமண விழாவில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், “விரைவில் தி.மு.க. ஆட்சி உதயமாகப் போகிறது. நல்ல சூழல் அமைய இருக்கிறது” என்று தெரிவித்தார். அவரது பேச்சை சுட்டிக்காட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அருண்ராஜ், இது திரைமறைவில் நடைபெறும் குதிரை பேர முயற்சிகளின் ஒப்புதல் வாக்குமூலம் போல இருப்பதாகவும், இதுகுறித்து மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து, தி.மு.க. முன்னாள் அமைச்சர் ரகுபதி, த.வெ.க.வில் 60 முதல் 70 எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் ஒன்றிணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறினார். இந்த பரபரப்பான சூழலில், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. காமராஜ் ஆகியோருடன் முதல்-அமைச்சர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார். ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அவரது அரசு இல்லமான பாமணி இல்லத்தில் மதியம் 3 மணிக்கு கூட்டம் நடைபெறுகிறது. ஜனவரி சட்டமன்ற கூட்டத்தொடரில் செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.













