
லக்னோ: செப். 3:
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஜனவாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை மற்றும் வெள்ளம் சார்ந்த அசம்பாவிதங்களில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுவரை 16,784 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஒரே நாளில் மட்டும் 3,042 பேரை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். மாநிலத்தில் பாதிக்கப்பட்ட 35 மாவட்டங்களில், 23 மாவட்டங்களில் வெள்ள நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிரதாப்கரில் பிரியான்ஷ் என்ற 18 மாதக் குழந்தையும், அம்ரோஹாவின் கஜரௌலாவில் ஷேரா (32), சுரேஷ் (55) ஆகிய இருவருமாக மொத்தம் 3 பேர் மழைக்குப் பலியாகியுள்ளனர்.
போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள்:
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளுக்காக 1,499 விசைப்படகுகள் களமிறக்கப்பட்டுள்ளன. தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்க 1,067 மருத்துவக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. 5 லட்சத்துக்கும் அதிகமான குளோரின் மாத்திரைகளும், 1.77 லட்சம் ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகளும் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
மாநிலம் முழுவதும் 1,311 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, தற்போது 201 முகாம்கள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 68,000-க்கும் அதிகமான நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகளும், 3.36 லட்சத்துக்கும் அதிகமான உணவுப் பொட்டலங்களும் வழங்கப்பட்டுள்ளன.
23 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்:
வாரணாசி, பிரயாக்ராஜ், அயோத்தி, கோரக்பூர், பல்லியா, காஜிபூர், பரேலி, லக்கீம்பூர் கேரி, பிலிபித், சோன்பத்ரா, சந்தௌலி, பாராபங்கி, சீதாபூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் வெள்ள அபாயம் தீவிரமடைந்துள்ளது.
பல்லியா பகுதியில் கங்கை மற்றும் சர்யூ நதிகளில் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் 20,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பிலிபித் பகுதியில் சாரதா மற்றும் தேவோஹா நதிகள் கரைபுரண்டு ஓடுகின்றன. பன்பாசா அணையில் இருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. பாலம் மூழ்கியதால் 18-க்கும் மேற்பட்ட கிராமங்களின் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநிலப் படை வீரர்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.













