
சென்னை: செப். 24-
நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை அவரது ரசிகர்களிடையே நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ரசிகர்கள் ஏற்கெனவே புதிய கட்சி தொடங்கிய நிலையில், தற்போது காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரிலும் 2-வது கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
குன்றத்தூரில் அஜித் ரசிகர்கள் சார்பில் ‘அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற முதல் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பங்கேற்றனர். ‘நாளைய முதல்வரே, பதவியேற்க வா’ என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன.
மேலும், நடிகர் அஜித்தின் புகைப்படத்துக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்து, ‘நாளைய முதல்வர் அஜித்’ என கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து கட்சியின் தலைவர் பாபு கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் சின்னமாக கார் அறிவிக்கப்பட்டதுடன், நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. இதுகுறித்து கட்சித் தலைவர் பாபு கூறுகையில், நடிகர் அஜித்தை 2031-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக்கும் லட்சியத்துடன் இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து, மக்கள் நலனுக்காக மாவட்டம், நகரம், ஊராட்சி வாரியாக பல்வேறு நலப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். சில நாட்களுக்கு முன்பு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அஜித் ரசிகர்கள் ‘தமக’ என்ற கட்சியைத் தொடங்கி, கொடியையும் அறிமுகப்படுத்தினர். நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், அரசியலுக்கு வரமாட்டேன் என்றும், அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளியளவும் இல்லை என்றும் பலமுறை பொதுவெளியில் தெரிவித்துள்ளார். இருப்பினும் ரசிகர்கள் தொடர்ந்து கட்சிகளைத் தொடங்கி வரும் நிலையில், அஜித் தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை.










