Home மாவட்டங்கள் பெங்களூர் விமானத்தில் வந்து பெங்களூரில் கொள்ளை அடிக்கும் இளைஞர் கைது

விமானத்தில் வந்து பெங்களூரில் கொள்ளை அடிக்கும் இளைஞர் கைது

பெங்களூர்: செப். 24-
விமானத்தில் வந்து பெங்களூரில் பூட்டிய வீடுகளைக் கொள்ளையடித்துவிட்டு, மீண்டும் விமானத்திலேயே பறந்து சென்ற ‘ஹைடெக்’ கொள்ளையன் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தைச் சேர்ந்தவன் நானவத் வினோத் குமார் என்ற முகமது பஷீர் ‘பி.டெக்’ பட்டதாரியான இவனை விஃல்சன் கார்டன் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். இவன் மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து கொள்ளையடித்து, அந்தப் பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
கல்லூரியில் பி.டெக் படித்துக்கொண்டிருந்தபோதே கொள்ளைச் சம்பவத்தில் சிக்கி, ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவித்துள்ளான். சிறையிலிருந்து வெளியே வந்ததும் சலூனில் வேலை பார்த்த வங்கதேசத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவன், அவருடன் வங்கதேசத்திற்கே சென்று 9 ஆண்டுகள் வாழ்ந்து அந்நாட்டு குடியுரிமையையும் பெற்றுள்ளான். பின்னர் போலி பாஸ்போர்ட் தயாரித்து இத்தாலி மற்றும் ஜெர்மனிக்குச் சென்று சமையல் வேலை செய்து, அதில் திருப்தி இல்லாததால் மீண்டும் பழையபடி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளான்.
கடந்த ஆண்டு நேபாளம் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் ஊடுருவிய வினோத் குமார், மீண்டும் தன் பழைய பாணியில் விமானங்கள் மூலம் வெவ்வேறு நகரங்களுக்குப் பறந்து சென்று கைவரிசை காட்டி வந்துள்ளான். கொள்ளையடிப்பதற்காகவே விமானத்தில் பெங்களூருக்கு வரும் இவன், காரியத்தை முடித்ததும் மீண்டும் விமானத்திலேயே வேறு நகரத்திற்குத் தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தான். சமீபத்தில் பெங்களூரில் கொள்ளையடித்த பணத்தை டெல்லியில் உள்ள தனது மனைவியிடம் கொடுப்பதற்காக விமான நிலையம் சென்றபோது, தயாராக இருந்த விஃல்சன் கார்டன் காவல்துறையினர் இவனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவனிடமிருந்து மேலும் பல கொள்ளைச் சம்பவங்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.