Home மாவட்டங்கள் சென்னை அன்பில் மகேஸ் உதவியாளரிடம் விசாரணை

அன்பில் மகேஸ் உதவியாளரிடம் விசாரணை

சென்னை, செப். 20-தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு அரசு ஒப்புதல்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகார் தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸின் உதவியாளர் அருண் பிரகாஷிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்யப்பட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பி.டி.அரசகுமார் கடந்த ஜூன் 27-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரது உறவினர்களான ஆரோக்கியராஜ், சுரேஷ் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 177 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், சுமார் ரூ.100 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாகவும் காவல் துறை தெரிவித்துள்ளது. வழக்கு தொடர்பாக அன்பில் மகேஸுடன் தொடர்புடைய 9 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, அன்பில் மகேஸிடம் போலீஸார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், அவரது உதவியாளர் அருண் பிரகாஷிடம் நேற்று விசாரணை நடைபெற்றது. அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் முழுமையாக வீடியோவாகவும் எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்யப்பட்டன. அருண் பிரகாஷிடம் நடத்தப்பட்ட விசாரணை இரவு வரை நீடித்ததாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.