
பெங்களூரு, செப். 20-
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் நவநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில், விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி ஒருவர், சம்பவத்தன்று காலை விடுதி அருகே நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக வந்த சுதிப் (27) என்ற வாலிபர், மாணவிக்கு நடுரோட்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சத்தமிட்டு அலறினார். அந்த நேரத்தில் அங்கு வந்த சேத்தன் (25), ரோகன் (25) ஆகிய 2 வாலிபர்கள், சுதிப்பை சரமாரியாக தாக்கினர். மாணவியும் தனது செருப்பால் சுதிப்பை அடித்தார். இதில் சுதிப் சுயநினைவின்றி சாலையில் சுருண்டு விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நவநகர் போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து சுதிப்பை மீட்டு சிகிச்சைக்காக பாகல்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் சுதிப்பை கைது செய்யாமல், அவருக்கு உதவ வந்த சேத்தன் மற்றும் ரோகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மாணவியும், கைது செய்யப்பட்ட வாலிபர்களின் பெற்றோரும் போலீசாரின் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து மாணவி கூறுகையில், “என்னை காப்பாற்றியவர்கள் சேத்தனும் ரோகனும் தான். அவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று கண்ணீருடன் கோரிக்கை விடுத்தார். மேலும், சுதிப்பை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















