
பெங்களூரு, செப். 20- கர்நாடக மாநிலம் ராமநகரா தொட்டேரி அருகே கண்டறியப்பட்ட போலி மருந்து கும்பலின் நெட்வொர்க் பல மாநிலங்களுக்கும் பரவியிருப்பது எஸ்டிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. பெங்களூரு உட்பட பத்து இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைச் சேகரித்துள்ள எஸ்டிஐ, ஏற்கனவே ஐந்து-ஆறு மாநிலங்களிலும் விசாரணை நடத்தியுள்ளது. பல மருத்துவமனைகளுக்கு போலி மருந்துகள் விநியோகம் செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் விசாரணை நடத்துவது, குற்றவாளிகளிடம் இருந்து ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களைச் சேகரிப்பது எஸ்டிஐ-க்கு சவாலாக உள்ளது. இதன் பின்னணியில், வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வாய்ப்புள்ளது. விரைவில் உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெற்று, சிபிஐ விசாரணைக்கு மாற்றுவது தொடர்பான கடிதப் பரிமாற்றங்கள் நடத்தப்படலாம். எஸ்டிஐ விசாரணையின் போது போலி மருந்து நெட்வொர்க்கின் மேலும் பல கொடூரமான முகங்கள் வெளிவந்துள்ளன. இது ஒரு வட்டம் வடிவில் இயங்கி வந்தது என்பது தெரியவந்துள்ளது. விநியோகஸ்தர் துணை விநியோகஸ்தர் ( மொத்த சில்லறை விற்பனையாளர் மற்றும் சில்லறை விற்பனையாளர் மூலமாக போலி மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஒரு மாத்திரையை தயாரிக்க வெறும் 150 முதல் 200 ரூபாய் மட்டுமே செலவானது. ஆனால் அதே மாத்திரை ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இரண்டு வழிகளில் போலி மருந்துகள் தயாரிக்கப்பட்ட விஷயம் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அசல் மருந்துகளுடன் வேறு வேறு பொடிகளைக் கலந்து போலி மருந்தாக விற்பனை செய்து வந்தனர். மற்றொரு புறம், அசல் தயாரிப்பு உரிம எண் மற்றும் மருந்து எண்களையே பயன்படுத்தி அதே போன்று போலி மருந்துகள் தயாரிக்கப்பட்டு வந்தன. மேலும், அசல் மருந்தின் பாட்டில், ஸ்ட்ரிப் மற்றும் ரேப்பர் போன்றே போலியாக பேக்கிங் செய்யப்பட்டது. மருத்துவர்கள் மருந்தின் அடையாள எண்ணைச் சரிபார்த்தபோதும் எண் ஒரே மாதிரியாக வந்ததன் காரணமாக, இது போலி மருந்து என்ற சந்தேகமே வராதவாறு இந்த நெட்வொர்க் இயங்கி வந்தது என்பது எஸ்டிஐ விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வெளிநாட்டிலேயே தங்கியுள்ளார்: வழக்கின் முக்கிய குற்றவாளி பிரசாந்த் இன்னும் அஜர்பைஜானிலேயே தங்கியுள்ளார். கடந்த செப். 9 ஆம் தேதியுடன் பிரசாந்தின் விசா காலம் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது அஜர்பைஜான் சுங்கத்துறை அதிகாரிகளின் காவலில் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.இந்தியாவிற்கும் அஜர்பைஜானிற்கும் இடையே குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தம் இல்லாததன் காரணமாக, பிரசாந்தை நேரடியாக இந்தியாவுக்கு அழைத்து வர முடியவிலலை.பிரசாந்த் அங்குள்ள பிரச்சனையைத் தீர்த்துக்கொண்டு அவராகவே இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியுள்ளது. அதன் பிறகு, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ள லுக்அவுட் நோட்டீஸ் அடிப்படையில் விமான நிலையத்திலேயே அவரை கைது செய்ய வாய்ப்புள்ளது.













