Home மாவட்டங்கள் சென்னை அன்பில் மகேஸ் கைது: உதயநிதி கண்டனம்

அன்பில் மகேஸ் கைது: உதயநிதி கண்டனம்

சென்னை, அக். 27–-
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: “அரசியல் பழிவாங்கும் நோக்கோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை கைது செய்துள்ள இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். திரும்பிய திசையெல்லாம் தறிகெட்டுப் போயிருக்கும் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள், விலைவாசி உயர்வு, தவெகவினரின் அட்டூழியங்கள் ஆகியவற்றால் இந்தக் கோமாளி அரசின் தோல்விகளை மறைக்கவும், திசைதிருப்பவும் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.சகோதரர் அன்பில் மகேஸ் இந்தச் சூழலை சட்டப்படி எதிர்கொண்டு மீண்டு வருவார். வழக்குகளாலும், கைது நடவடிக்கைகளாலும் கழக உடன்பிறப்புகளை ஒருபோதும் அடக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 2021-–26 காலகட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக அன்பில் மகேஸ் பதவி வகித்தார். அப்போது தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்ததாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் போலீஸில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், சங்க மாநிலப் பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக அன்பில் மகேஸ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.