
புதுடெல்லி, அக். 27-
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, எண்ட்ரி லெவல் மற்றும் மிட் லெவல் பணிகளில் இந்த நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. ஏற்கெனவே அமேசான், ஆரக்கிள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.இந்நிலையில், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், தனது 60 ஆயிரம் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை அதிகரிப்பதுடன், நிறுவனத்தின் செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் காரணமாக இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் பணியாற்றும் ஊழியர்கள் பணி வாய்ப்பை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனினும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் டேட்டா சென்டர்கள், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இந்தத் திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட்டின் ஆண்டு அறிக்கையின்படி, 2026-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி நிலவரப்படி, அந்நிறுவனத்தில் உலகளவில் 2,23,000 முழுநேர ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்று நிறுவனத்திலிருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வழக்கமான பணிநீக்க இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து கிடைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் தொழில் மாற்றத்துக்கான உதவிகளும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை ஏற்கும் ஊழியர்கள், டிசம்பர் முதல் வாரத்துக்குள் தங்களது முடிவைத் தெரிவிக்க வேண்டும். திட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள் டிசம்பர் 31-ம் தேதி மைக்ரோசாப்ட் நிறுவனத்திலிருந்து வெளியேறுவார்கள்.













