
சென்னை, அக். 27–-
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவத்தைச் சுட்டிக்காட்டி, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தமிழக அரசை விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “காவலர்களைத் தாக்கிவிட்டு கைதிகள் தப்பிச் செல்லும் நிலையில் சிறைச்சாலையே இருக்கிறது என்றால், சாமானிய மக்கள் செல்லும் சாலைகளில் இந்தத் திக்குத் தெரியாத ஆட்சியில் எப்படி பாதுகாப்பு இருக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடியதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாகக் கூறிய அவர், வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல், அரசுக்கு நீதிமன்றக் குட்டுகள், மின்வெட்டு, மின் கொள்முதலில் ஊழல் ஆகியவற்றைத் தொடர்ந்து சிறைத்துறையும் அந்தப் பட்டியலில் சேர்ந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
மூன்று துறைகளுக்கும் ஒருவரே அமைச்சராக இருப்பதுதான் இதில் முக்கிய அம்சம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். “மைக்” வெறிபிடித்து அலைந்து, தூக்கத்திலும் “அண்ணா திமுக புராணம்” பாடிக்கொண்டிருக்கும் நிர்மல் குமாரின் நிர்வாக லட்சணத்தைக் கண்டு ஊரே கைகொட்டிச் சிரிக்கிறது எனவும் பழனிசாமி விமர்சித்துள்ளார்.
ஏற்கெனவே புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பியோடியபோதே தமிழகச் சிறைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும் என்றும், அதற்காக அரசுக்கோ அமைச்சருக்கோ நேரமில்லை போலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புழல் சிறைக்கு ஆய்வுக்குச் சென்ற முதல்வர் விஜயை நோக்கி, “நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது? அது ஆய்வா, அல்லது ஜோதிடப் பரிகாரமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதிகரிக்கும் கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஆளுங்கட்சி நிர்வாகியின் போதைப்பொருள் புழக்கம், தொடர்ந்து மாயமாகும் குழந்தைகள், கைதிகள் தப்பியோட்டம் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய அவர், தப்பிய கைதிகளைப் பிடித்து மீண்டும் சிறையில் அடைப்பதுடன், தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். நேற்று (அக். 26) இரவு சுமார் 11 மணிக்கு கைதிகள் தப்பியதாகவும், அவர்களைப் பிடிக்க 17 தனிப்படைகள் தேடுதல் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பியவர்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைப் பிடிக்க மாவட்ட, மாநில எல்லைகள் மற்றும் வனப்பகுதிகளில் போலீஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர்.














