Home மாவட்டங்கள் சென்னை அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் மருந்து தட்டுப்பாடு

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் மருந்து தட்டுப்பாடு

சென்னை, செப். 24-
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளுக்கான உயிர்காக்கும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன என்று திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், சென்னை, தேனி, தருமபுரி, திருப்பூர், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு மிகவும் அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.“பச்சிளம் குழந்தைகளுக்கு அடிப்படைத் தேவையான உயிர்காக்கும் மருந்துகளை வழங்க முடியாமல் சுகாதாரத் துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? இளம் பிஞ்சுகளின் விரலில் மோதிரம் மாட்டி விளம்பரம் தேடத் துடிக்கும் அக்கறையை, குழந்தைகளின் உயிர்களைக் காப்பதில் கொஞ்சமாவது காட்ட வேண்டாமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். குழந்தைகளுக்கான மருந்துகள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை தமிழக அரசு உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, தேர்தல் ஆணையம் தொடர்பாக அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், இந்தியாவில் உள்ள மூன்று தேர்தல் ஆணையர்களில் இருவர், வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்த்தல், நீக்குதல், மீண்டும் சேர்த்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் தரவுகளைக் கையாளுதல் போன்ற முடிவுகள் குறித்து 10 மாதங்களில் குறைந்தது 14 முறை முறையான ஆட்சேபனைகளை எழுப்பியுள்ளதாகச் செய்தி வெளியாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.