Home மாவட்டங்கள் சென்னை அல்கொய்தா தொடர்பு: கோவையில் வாலிபர் கைது

அல்கொய்தா தொடர்பு: கோவையில் வாலிபர் கைது

கோவை: செப்.18 –
தமிழகம் மற்றும் உத்தரபிரதேச பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து நடத்திய விசாரணையைத் தொடர்ந்து, கோவையில் தங்கியிருந்த உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த வாலிபர் மக்சூத் அலி, 21, கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு மேன்பவர் ஏஜன்சி வாயிலாக கோவைக்கு பணிக்கு வந்த மக்சூத் அலி, ஆன்லைன் மூலம் இளைஞர்களை பயங்கரவாத செயல்பாடுகளுக்கு ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கோவை ஹோப்காலேஜ் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த அவர், அங்கிருந்து பணிக்கு சென்று வந்துள்ளார்.
செப்., 12ம் தேதி, முகமது நபீல் என்பவரை, ‘உபா’ எனும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் உத்தரபிரதேச போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவையில் தங்கி பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த மக்சூத் அலி குறித்த தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உத்தரபிரதேச தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார், கோவை மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து கோவையில் விசாரணை நடத்தினர். விசாரணையின் அடிப்படையில், ஹோப்காலேஜ் பகுதியில் தங்கியிருந்த மக்சூத் அலியை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், விசாரணைக்காக உத்தரபிரதேச போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, உத்தரபிரதேச போலீசார் அவரை அழைத்துச் சென்றனர். மக்சூத் அலிக்கு ‘அல்கொய்தா’ அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், அவரது ‘வாட்ஸ் ஆப்’ எண்ணில் பாகிஸ்தானைச் சேர்ந்த பல தொலைபேசி எண்கள் இருப்பதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அவரது ஆன்லைன் நடவடிக்கைகள் மற்றும் தொடர்புகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.