
பெய்ஜிங், மே 9- கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற ராணுவ ரீதியிலான மோதலின் (ஆபரேஷன் சிந்தூரின்) போது, பாகிஸ்தானுக்கு நேரடியாக தொழில்நுட்ப உதவியை வழங்கியதாக சீனா முதன்முறையாக ஒப்பு கொண்டுள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் 26 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல்கள் தீவிரமடைந்தன. இந்நிலையில் சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்ட ஓர் அறிக்கையில் இது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் மேம்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா வான்வழி விமானங்களின் வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றும், சீ’ன விமானத் தொழில் கழகத்தின் விமான வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பொறியாளர் ஜாங் ஹெங் என்பவருடனான நேர்காணலை, அந்நாட்டின் அரசு ஒளிபரப்பு நிறுவனம் ஒளிபரப்பியதாக ‘சவுத் சீனா மார்னிங் போஸ்ட்’ செய்தி வெளியிட்டுள்ளது. AVIC-ன் ‘Chengdu Aircraft Design and Research Institute’-ஐ சேர்ந்த பொறியாளர் ஜாங் ஹெங், பாகிஸ்தானுக்குத் தொழில்நுட்ப உதவி வழங்கிய குழுவில் தானும் ஒருவராக இருந்ததாக கூறி இருக்கிறார். சீனாவின் நவீனப் போர் விமானங்கள் மற்றும் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) உருவாக்குவதில் இந்நிறுவனம் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.





















