Home மாவட்டங்கள் பெங்களூர் ஆபாச செய்தி வழக்கு திரும்ப பெற நடிகை ரம்யா மறுப்பு

ஆபாச செய்தி வழக்கு திரும்ப பெற நடிகை ரம்யா மறுப்பு

பெங்களூரு, செப். 6-
ஆபாச மெசேஜ் மற்றும் கருத்துகளை அனுப்பிய வழக்கு தொடர்பான நபர்களின் குடும்பத்தினர், வழக்கை திரும்ப பெறுமாறு கன்னட நடிகை ரம்யாவிடம் மனமுருசி கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் எந்த காரணத்தைக் கொண்டும் வழக்கை திரும்ப பெற முடியாது என்று நடிகை ரம்யா கறாராக தெரிவித்துவிட்டார்.
நீதிமன்ற விசாரணையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களின் குடும்பத்தினர் ரம்யாவிடம் மன்னிப்பு கேட்டு, “இந்த முறை தவறு நடந்துவிட்டது. தயவுசெய்து வழக்கை வாபஸ் வாங்குங்கள்” என்று கெஞ்சினர்.
இதற்கு பதிலளித்த ரம்யா, “இது அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். நான் எந்த சூழ்நிலையிலும் வழக்கை திரும்ப பெற மாட்டேன்” என்று ஆவேசமாக கூறியதாக தெரிகிறது.
சமூக வலைதளங்கள் மற்றும் மொபைலை பயன்படுத்தி யார் மீதாவது கண்டபடி தவறாக கருத்து தெரிவிப்பது சரியல்ல. ஒரு பெண்ணை பற்றி தவறாக பேசுவதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும், இந்த வழக்கில் எத்தனை முறை சாட்சி சொல்ல அழைத்தாலும் நீதிமன்றத்திற்கு வந்து சாட்சியளிக்க தயாராக இருக்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்களை மன்னிக்கும் கேள்வியே இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக சி.சி.பி. போலீசார் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 6-வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.