Home மாவட்டங்கள் சென்னை ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து 5.65 லட்சம் பேர் பயணம்

ஆயுத பூஜையையொட்டி சென்னையில் இருந்து 5.65 லட்சம் பேர் பயணம்

சென்னை, அக். 17-
ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் இருந்து ஒரே நாளில் 5.65 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பஸ் மற்றும் ரெயில்களில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளனர். சனி, ஞாயிறு தொடர் விடுமுறை காரணமாக, பெரும்பாலானோர் முன்கூட்டியே சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர். அரசு பஸ்களில் பயணம் செய்வதற்காக ஒரே நாளில் சுமார் 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருந்தனர். மேலும், அன்றைய தினம் சுமார் 2 லட்சம் பேர் அரசு பஸ்களில் பயணம் செய்திருக்கலாம் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். சனிக்கிழமை பயணத்துக்காக சுமார் 10 ஆயிரம் பேரும், ஞாயிற்றுக்கிழமை பயணத்துக்காக சுமார் 4 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1,626 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. அவற்றில் சுமார் 85 சதவீத இருக்கைகள் நிரம்பிய நிலையில், சுமார் 65 ஆயிரம் பேர் பயணம் செய்ததாக அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தெரிவித்தார். வழக்கத்தைவிட அதிகமானோர் ஒரே நேரத்தில் பயணம் செய்ததால், கோயம்பேடு மற்றும் கிளாம்பாக்கம் பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் சற்று அதிகமாகக் காணப்பட்டது. ரெயில்களில் இரண்டு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து காத்திருந்த பயணிகள் அதிக அளவில் இருந்ததால், சென்னை எழும்பூர், சென்டிரல், தாம்பரம் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக இருந்தது. நெல்லை, தூத்துக்குடி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட தென் மாவட்ட நகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் சென்ற ரெயில்களின் அனைத்துப் பெட்டிகளும் நிரம்பி வழிந்தன. முன்பதிவில்லாத பொதுப் பெட்டிகளில் ஏறுவதற்காக பயணிகள் போட்டிபோட்டு இடம் பிடித்தனர். கூட்ட நெரிசல் காரணமாக, பெண்கள் உள்பட சிலர் பாதுகாப்பற்ற நிலையில் பயணம் செய்யும் சூழல் ஏற்பட்டது. சில பெண்கள் படிகளில் தொங்கியபடியும் பயணம் செய்தனர்.