
சென்னை, அக். 27–-
ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளை (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது. தமிழக அரசின் பால்வளத் துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பால் மட்டுமின்றி பால்கோவா, நெய், வெண்ணெய், மில்க் ஷேக், ஹெல்த் மிக்ஸ், யோகர்ட், பால் பிஸ்கட், சாக்லெட், குல்பி, கப் ஐஸ்கிரீம், சாக்கோ பார், சாக்கோ பீஸ்டு, கசாட்டா, கேன்டி, ப்ரீமியம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்களையும் ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. மூலப்பொருட்களின் விலை உயர்வு, தயாரிப்பு மற்றும் கொள்முதல் செலவு உள்ளிட்ட காரணங்களால் நெய், மில்க் ஷேக், மைசூர்பாக், வெண்ணெய் உள்ளிட்ட 63 ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 100 கிராம் நெய் ரூ.85-ல் இருந்து ரூ.95 ஆகவும், 500 மில்லி லிட்டர் நெய் ரூ.365-ல் இருந்து ரூ.400 ஆகவும் உயர்ந்துள்ளது.
100 கிராம் ரசகுல்லா ரூ.45-ல் இருந்து ரூ.50 ஆகவும், 100 கிராம் வெண்ணெய் ரூ.60-ல் இருந்து ரூ.70 ஆகவும் அதிகரித்துள்ளது.
கால் கிலோ குலோப்ஜாமுன் ரூ.100-ல் இருந்து ரூ.115 ஆகவும், கால் கிலோ மைசூர்பாக் ரூ.140-ல் இருந்து ரூ.160 ஆகவும், 200 மில்லி லிட்டர் லஸ்ஸி ரூ.20-ல் இருந்து ரூ.23 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மில்க் ஷேக் விலை ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், 500 கிராம் தயிர் ரூ.35-ல் இருந்து ரூ.40 ஆகவும் அதிகரித்துள்ளது.
10 வகை மில்க் ஷேக்குகளுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தும்.
மேலும், 50 கிராம் ப்ரீமியம் கப் ரூ.5-ல் இருந்து ரூ.7 ஆகவும், ஒரு கிலோ தயிர் ரூ.120-ல் இருந்து ரூ.130 ஆகவும்,
200 மில்லி மோர் ரூ.8-ல் இருந்து ரூ.10 ஆகவும் உயர்ந்துள்ளது. பெட் பாட்டிலில் விற்கப்படும் மோர் ரூ.12-ல் இருந்து ரூ.14 ஆக அதிகரித்துள்ளது.













