
பெளகாவி, நவ. 7-
கர்நாடக மாநிலம் பெளகாவி சதாசிவ நகரைச் சேர்ந்தவர் டாக்டர் நிலேஷ்குமார். இவரது மனைவியின் சகோதரிக்கு இங்கிலாந்து செல்ல விசா எடுத்துத் தருவதாகவும், அங்கேயே வேலை வாங்கித் தருவதாகவும் கூறி குஜராத்தைச் சேர்ந்த மோகினி பர்சோத்தம்பாய் ஜிஞ்சாலா என்ற பெண் உறுதி அளித்துள்ளார்.
இதனை உண்மையென நம்பிய டாக்டர் நிலேஷ்குமார், அந்தப் பெண்ணிடம் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.28.15 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்டு பல மாதங்கள் ஆகியும் அந்தப் பெண் சொன்னபடி விசாவையும் எடுத்துத் தரவில்லை; வாங்கிய பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை.கடந்த ஒரு வருடமாகப் பணத்தைத் திருப்பித் தருமாறு அல்லது விசா ஏற்பாடு செய்து தருமாறு பலமுறை கேட்டும் அந்தப் பெண் எந்தப் பதிலும் கூறாமல் ஏமாற்றி வந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த டாக்டர் நிலேஷ்குமார் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் பெளகாவி ஏ.பி.எம்.சி. காவல் நிலையப் போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.













