Home செய்திகள் உலக செய்திகள் இந்தியாவை தாக்க கடல்வழி பயிற்சி

இந்தியாவை தாக்க கடல்வழி பயிற்சி

இஸ்லாமாபாத்: நவ. 7-
பாகிஸ்தானில், சுற்றுலாப் பயணிகளைப் போல வந்து கடல்வழித் தாக்குதல் நடத்துவதற்கான பயிற்சியில் லஷ்கர் பயங்கரவாதிகள் ஈடுபட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக, ஸ்கூபா டைவிங் எனப்படும் கடலடியில் நீந்தும் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு நீருக்கடிச் செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் கராச்சிக்கு அருகே அமைந்துள்ள சார்னா தீவு, சுற்றுலாவுக்குப் பிரபலமான பகுதியாகும். இந்தத் தீவுப் பகுதியில், லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான ‘லஷ்கர் தாவா’வைச் சேர்ந்தவர்கள், சுற்றுலாப் பயணிகளைப் போன்று செயல்பட்டு கடல்வழித் தாக்குதல் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக நமது உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது: சார்னா தீவில் லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு ஸ்கூபா டைவிங், நீருக்கடியில் சண்டையிடுதல் மற்றும் பிற நீருக்கடிச் செயல்பாடுகள் தொடர்பாகப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மங்க்லா அணைப் பகுதியில் அவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். கடந்த 2008-ம் ஆண்டு, லஷ்கர் பயங்கரவாதிகள் கடல்வழியாக ஊடுருவி மும்பை மீது தாக்குதல் நடத்தினர். தற்போது, அதே தந்திரங்களை நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் செயல்படுத்துவதே அவர்களின் திட்டமாக உள்ளது என்று பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.